மகனுக்குப் பொது மன்னிப்பு வழங்கிய பைடன் ; அதிருப்தி குரல் எழுப்பியுள்ள ஜனநாயகக் கட்சியினர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமது மகன் ஹன்டர் பைடனுக்குப் பொது மன்னிப்பு வழங்கியது குறித்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலர் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளனர்.ஜனநாயகம், சட்டம் ஆகியவை மீது அமெரிக்கர்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்துவிடும் என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.
போலி தகவலக் வழங்கியது, சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்தது, கூட்டரசு வரி தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆகியவை சார்ந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமது மகனுக்குப் பொது மன்னிப்பு வழங்க அதிபர் பைடன் எடுத்த முடிவு ஏமாற்றமளிப்பதாக கொலோராடோ மாநிலத்தின் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி ஜேசன் குரோ தெரிவித்தார்.
“தமது மகனுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்போவதில்லை என்று அவர் வாக்குறுதி அளித்திருந்தார். ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கப்போவதாக ஜனநாயகக் கட்சி இனி தெரிவித்தால் அதை மக்கள் நம்பமாட்டார்கள். இது ஜனநாயகக் கட்சிக்குக் கடுமையான சவாலை ஏற்படுத்தியுள்ளது,” என்றார் குரோ.
சாதாரண அமெரிக்கர்கள் நடத்தப்படும் விதமும் பணக்கார, அரசியல் பலம் கொண்டோர் நடத்தப்படும் விதமும் வேறுபடுத்துவதை அதிபர் பைடனின் செயல் காட்டுவதாக வாஷிங்டனின் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி மேரி குலுசென்காம்ப் பெரேஸ் தெரிவித்தார்.“அதிபர் தவறான முடிவை எடுத்துவிட்டார். எந்தக் குடும்பமும் சட்டத்துக்கு அப்பால் இருக்கக்கூடாது,” என்றார் அவர்.
அதிபர் பைடனின் செயலுக்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளபோதிலும், ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவரைத் தற்காத்துப் பேசியுள்ளனர்.
அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பதவி ஏற்கும் டோனல்ட் டிரம்ப் பதவியேற்புக்குப் பிறகு தமது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்ற கவலை அதிபர் பைடனுக்கு இருக்கலாம் என்றும் அதன் காரணமாக அவர் தமது மகனைக் காப்பாற்ற எடுத்த முடிவு நியாயமானது என்றும் அவர்கள் கூறினர்.