இஸ்ரேலுக்கு 1 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை அனுப்ப பைடன் நிர்வாகம் திட்டம்
இஸ்ரேலுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகப் பெறுமதியான ஆயுதங்களை அனுப்பிவைக்கத் திட்டமிட்டுவதாக அமெரிக்க நாடாளுமன்றத்திடம் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ராஃபா நகரில் மில்லியன்கணக்கான பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் அங்கு தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் இஸ்ரேலிடம் உலக நாடுகள் கூறிவரும் நிலையில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் இந்த முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பைடன் அரசாங்கம் இஸ்ரேலுக்கு அனுப்பிவைக்க இருக்கும் ஆயுதங்களில் கவச வாகனங்கள், கவச வாகனங்களுக்கான குண்டுகள் முதலியவை அடங்கும் . ஆனால் அதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் முதலில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ராஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அதற்கு ஆயுதங்கள் அனுப்புவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும் என்றும் அதிபர் பைடன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மே 14ஆம் திகதியன்று ராஃபாவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் இஸ்ரேல் அதன் கவச வாகனங்களை அனுப்பியதாக பாலஸ்தீனர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தி அனைத்துலகச் சட்டத்தை மீறியிருக்கக்கூடும் என்று மே 10ஆம் திகதியன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்தது.