காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பழங்கள் மிகவும் சுவையானவை மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியவை. பலவிதமான பழங்களை இயற்கை நமக்காக அளித்துள்ளது. அதில் ஒன்று தான் ஆப்பிள்.தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று சொல்வார்கள். ஏனெனில் அந்த அளவில் ஆப்பிள் நமது உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கின்றன. மேலும் நிறைய பேருக்கு ஆப்பிள் மிகவும் விருப்பமான பழமாக இருக்கும்
ஆனால் இந்த ஆப்பிளை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்பது தெரியுமா? கீழே காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
கொலஸ்ட்ரால் மற்றும் பிபி குறையும்
ஒருவருக்கு இதய நோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தம் தான். உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அந்த கொலஸ்ட்ரால் இதயத்திற்கு செல்லும் தமனிகளில் படிந்து பெருந்தமனி தடிப்பை ஏற்படுத்தி, உயர் இரத்த அழுத்த பிரச்சனையை தீவிரமாக்கி, இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும். ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து தமனிகளில் படிந்துள்ள கொலஸ்ட்ராலைக் கரைத்து, இரத்த நாளங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. கூடுதலாக இரத்த அழுத்தத்தையும் குறைக்கின்றன.
செரிமானம் மேம்படும்
ஒரு ஆப்பிள் சாப்பிட்டாலும், அது வயிற்றை நிரப்புவதோடு, அதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, க்ளுக்கோஸ் உடைக்கப்படுவதை மெதுவாக்கி இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. அதே சமயம் கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமானத்தை எளிதாக்குகிறது, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் குடலியக்கத்தை மேம்படுத்துகிறது.
நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும்
ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஆதரவளிக்கும் வைட்டமின் சியை கொண்டுள்ளன. இது அழற்சியடைந்த நோயெதிர்ப்பு செல்களை அழற்சி எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஆதரவளிக்கும் செல்களாக மாற்ற உதவி புரிந்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது.
இரத்த சர்க்கரை கட்டுப்படும்
சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளை தினசரி உணவில் சேர்த்து வருவது நல்லது. அதுவவும் டைப்-2 சர்க்கரை நோயாளிகள் தினமும் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, இரத்த நாளங்களில் சர்க்கரை நுழைவதைத் தடுத்து இரத்த சர்க்கரை அளவை சீரான அளவில் பராமரித்து, டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
எடை இழப்பிற்கு உதவும்
நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஆப்பிளை சாப்பிடுங்கள். எடையைக் குறைக்க பழங்கள் மற்றும் காய்கறிகள் பெரிதும் உதவி புரியும். அதுவும் ஆப்பிளை உட்கொண்டால், அதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்கி, இரத்த சர்க்கரையை சீராக பராமரித்து, வயிற்றை நிரப்புவதோடு, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்கிறது. ஒரு மீடியம் அளவு ஆப்பிளில் 95 கலோரிகளே உள்ளன. எனவே டயட்டில் இருக்கும் போது, சர்க்கரை உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்தால், ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள்.
நரம்பியல் கோளாறுகளைத் தடுக்கும்
ஆப்பிளை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளேவோனாய்டு, நரம்பு செல்கள் சேதமடைவதைத் தடுத்து, நரம்பியல் கோளாறுகளால் அல்சைமர் போன்ற மறதி நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
புற்றுநோயைத் தடுக்கும்
ஆப்பிள் புற்றுநோயை எதிர்த்து போராட உதவலாம். ஆனால் இது புற்றுநோயை கட்டாயம் தடுக்கும் என்பதற்கு எவ்வித உறுதியும் இல்லை. இருப்பினும் பல ஆய்வுகளின் படி, ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மார்பக புற்றுநோய் போன்ற குறிப்பிட்ட புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுவது தெரிய வந்துள்ளது