BANvsWI – முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 450 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜஸ்டின் கிரீவ்ஸ் 115 ரன்னும், மைக்கேல் லூயிஸ் 97 ரன்னும், அலிக் அதான்ஸ் 90 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 3 விக்கெட்டும், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜேகர் அலி 53 ரன்னும், மொமினுல் ஹக் 50 ரன்னும் எடுத்தனர். லிட்டன் தாஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
181 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலிக் அதான்ஸ் 42 ரன்கள் எடுத்தார்.
வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது 6 விக்கெட்டும், மெஹிதி ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் துல்லியமாக பந்து வீசியதால் வங்கதேச வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
மெஹிதி ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்து 45 ரன்கள் எடுத்தார். ஜேகர் அலி 31 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வங்கதேச அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், ஜெய்டன் சீல்ஸ் தலா 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.