சிங்கப்பூரில் சந்தேகம் எழுந்தால் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் – அமைச்சர் எச்சரிக்கை
சிங்கப்பூரில் சந்தேகம் எழுந்தால் வங்கிக் கணக்குகளை பொலிஸார் முடக்குவார்கள் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பொலிஸாரின் மோசடி எதிர்ப்புப் பிரிவு 16,700க்கும் மேற்பட்ட அத்தகைய வங்கிக் கணக்குகளை முடக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கணக்குகள் சிங்கப்பூரர்களுக்குச் சொந்தமானவையா வெளிநாட்டினருக்குச் சொந்தமானவையா என்பது பார்க்கப்படுவதில்லை. மோசடிச் சம்பவங்கள் தவிர்த்த மற்ற குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையும் கவனிக்கப்படுவதில்லை.
தனிநபர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டால், வங்கிகள், புதிய கணக்குகளைத் திறந்துகொள்ள வாய்ப்பளிப்பதற்கு முடிவுசெய்யக்கூடும். இருப்பினும் கணக்கை அணுகச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடும். கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படக்கூடும்.
தனிநபர்களால் ஆபத்து அதிகம் எனக் கருதப்பட்டால் வங்கிகள் புதிய கணக்குகளைத் திறப்பதற்கு அனுமதி மறுக்கக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.