சிங்கப்பூர் விமான நிலையத்தில் லஞ்சம் கொடுக்க முயன்ற வங்கதேச நபர் கைது
முப்பது வயதான பங்களாதேஷை சேர்ந்த ரகிபுல், இரண்டு குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதற்காக ஒரு மாத சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
அக்டோபர் 2 ஆம் தேதி, ரகிபுல் வங்கதேசத்தில் இருந்து விமானத்தில் சிங்கப்பூர் வந்துள்ளார்.
சாங்கி ஏர்போர்ட் டெர்மினல் 2ல் உள்ள தானியங்கி பாதையை அடைந்ததும், ரகிபுல் சோதனைச் சாவடிகள் ஆணைய அமைப்பால் சிங்கப்பூருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டார்.
ஒரு அதிகாரி அவரை மேலதிக சோதனைகளுக்காக சோதனைச் சாவடிகள் ஆணைய கடமை அதிகாரி அறைக்கு அழைத்துச் சென்றார், பின்னர் ஒரு காத்திருப்பு அறைக்கு அழைத்துச் சென்றார்.
சோதனைச் சாவடிகள் ஆணைய சோதனைச் சாவடி இன்ஸ்பெக்டர் முஹம்மது ஃபிர்தௌஸ் அஹ்மத் ரகிபுலைக் காத்திருப்பு அறைக்கு அழைத்துச் சென்றபோது, அந்த வங்காளதேசியர் அதிகாரியிடம் “200 சிங்கப்பூர் டாலர்கள் தருகிறேன். தயவு செய்து சிங்கப்பூர் செல்ல என்னை அனுமதியுங்கள் என தெரிவித்திருந்தார்.
பின்னர் காத்திருப்பு அறைக்கு வந்த மேலும் ஒரு அதிகாரிக்கும் ரகிபுல் லஞ்சம் வழங்குவதாக தெரிவித்தார்.
இரண்டு அதிகாரிகளும் லஞ்ச சலுகைகளை ஏற்கவில்லை, மேலும் இந்த வழக்கு ஊழல் நடைமுறைகள் புலனாய்வு பணியகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
ஊழல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட எவருக்கும் $100,000 வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.