ஷேக் ஹசீனாவை நாடுகடத்த இந்தியாவிடம் பங்களாதேஷ் கோரிக்கை
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை உடனடியாக நாடுகடத்துமாறு பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு பங்களாதேஷில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறைகளைப் பிரயோகித்து ஒடுக்கிய சமயம் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டதாக ஷேக் ஹசீனா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 1600 பேர் வரை உயிரிழந்திருந்ததாக ஐ.நா. மதிப்பீடுகள் கூறுகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷ் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து பங்களாதேஷில் இருந்து தப்பித்து ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இந்த நிலையில் ஹசீனாவும், அவரது உள்துறை அமைச்சரும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்தார்கள் என பங்களாதேஷ் தீர்ப்பாயம் தீர்ப்பளித்து, இருவருக்கும் மரண தண்டனை விதித்தது.
இந்த நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் பங்களாதேஷிற்கும் இடையில் கைதிகளை நாடுகடத்துவது தொடர்பான உடன்படிக்கை ஒன்று உள்ளது.
இதன் பிரகாரம் முன்னாள் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் நாடுகடத்த வேண்டியது புதுடெல்லி அரசாங்கத்தின் பொறுப்பென பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.





