டெங்கு காய்ச்சலால் தத்தளிக்கும் பங்களாதேஷ் : 1,000 கடந்துள்ள இறப்புக்களின் எண்ணிக்கை
வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் சமீப வாரங்களில் மட்டும் இறப்பு எண்ணிக்கை 1,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் இதுவரை ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான நோய் பரவல் இது என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். அசாதாரணமான பருவமழை கொசுக்களுக்கு டெங்கு காய்ச்சலை பரப்புவது எளிதாக்கியுள்ளது.ஆனால் அதைக் கட்டுப்படுத்த அதிகாரிகளால் முடியாமல் போயுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தலைவலி, குமட்டல், மூட்டு மற்றும் தசை வலி ஆகியவை இதன் அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலானது எப்போதேனும் காணப்பட்டுள்ளது. ஆனால் காலநிலை திடீரென்று மாறவும் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவத்தொடங்கியது.மேலும் கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தற்போதைய டெங்குவால் இறப்பு விரைவாக ஏற்படுவதகாவும், கடந்த 2 மாதங்களில் மட்டும் நாளுக்கு 20 பேர்கள் வரையில் டெங்குவுக்கு பலியானதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, கடந்த 22 ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இறப்பு எண்ணிக்கை மிக அதிகம் எனவும் தெரிவித்துள்ளனர். கொசுக்கள் பெருகும் இடங்கள் உருவாகாமல் தடுக்க வங்கதேசம் நிர்வாகம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்களை தொடங்கியுள்ளது.மேலும், நாட்டின் 64 மாவட்டங்களிலும் தற்போது டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.