வங்கதேசம்- முதலில் நாடாளுமன்றம் கலைப்பு, அதன்பின் இடைக்கால அரச; அதிபர் ஷஹாபுதீன்
நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, அதன்பின் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் தெரிவித்துள்ளார்.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்துக்கு வந்த ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்திருக்கும் ஹசீனா, இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும், அதற்காக இங்கிலாந்து அரசிடம் தஞ்சம் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஷேக் ரேஹானா இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் எனவே, அவரோடு ஷேக் ஹசீனா லண்டலின் தங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி இல்லை என்றால் பெலாரஸ் நாட்டிற்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்று அவரது மகனும் தலைமை ஆலோசகருமான சஜீப் வஜீத் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ராஜினாமாவை தொடர்ந்து அடுத்தடுத்து அரசியல் நகர்வுகள் நடந்து வருகின்றன. வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் அந்நாட்டின் தலைவர் டாக்காவில் உள்ள பங்கபாபனில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் முப்படைகளின் தலைவர்கள் உடன் ஒரு சந்திப்பை இன்று நடத்தினார். கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்த முடிவுகள் குறித்து கூட்டத்தில் பேசிய அதிபர் முகமது ஷஹாபுதீன், “தற்போது இருக்கும் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, அதன்பின் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்படும். மேலும் தற்போது நாட்டில் நிலவும் கலவர சூழலை முடிவுக்கு கொண்டுவர ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவை வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்து மாணவர்களையும் விடுவிக்க உள்ளோம். ராணுவத் தளபதி வகர்-உஸ்-ஜமான், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை விரைவில் சந்திப்பார்.
அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், மதரஸாக்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்று திறக்கப்படும்” என்று கூறினார். இடைக்கால அரசை அமைப்பதற்கு முன்பாக, நாடாளுமன்றத்தைக் கலைப்பதன் மூலம் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.