இலங்கை தேர்தல் பணிகளுக்கு விமானங்களை பயன்படுத்த தடை!
தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச செலவில் விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அரச செலவில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அனைத்து வேட்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
அரசாங்க விமானங்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தினால் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஏனைய தேர்தல் அல்லாத உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு விமானங்களை பெற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அரசாங்கத்தின் விமானங்களை இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மற்றும் புகையிரதங்களை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தினால் அதற்கும் பணம் செலுத்தி ரசீதுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசாங்க சொத்துக்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.