ரசிகையின் முகத்தை பதம் பார்த்த பந்து – கதறி அழுதவரிடம் மன்னிப்பு கேட்ட சஞ்சு
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை வென்றுள்ளது.
இந்த தொடரின் கடைசி போட்டி நேற்று ஜோகார்னஸ்பேக்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் தான் போட்டியை ஆசையாகப் பார்க்க வந்த ரசிகை ஒருவரின் முகத்தில் சஞ்சு சாம்சன் விளாசிய சிக்ஸர் பந்து பயங்கர உள் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியின் இந்திய அணியின் இன்னிங்சின் போது 10-வது ஓவரை டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசினார். அந்த பந்தை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் டீப் மிட்-விக்கெட்டில் மடக்கி பெரிய சிக்ஸர் ஒன்றை விளாசினார். அந்த பந்து நேராக மைதானத்திற்குள் பார்க்க வந்த பார்வையாளர்களை நோக்கிச் சென்று கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருந்த ரசிகை ஒருவருடைய கன்னத்தில் பளார் என விழுந்தது.
பந்து வேகமாகப் பட்டதும் வேகமாகத் தனது முகத்தைத் திருப்பிக்கொண்டு வலியில் அந்த பெண் ரசிகை துடித்துக்கொண்டு இருந்தார். அவருடன் வந்த உறவினர் கையில் ஐஸ் கட்டியை வைத்துக்கொண்டு அவருடைய முகத்தில் ஒத்தனம் கொடுக்கப்பட்டது. இருப்பினும், அந்த பெண் ரசிகை வலி தாங்கமுடியாமல் துடித்துக் கதறி அழுதுகொண்டு இருந்தார்.
இதனைக் கவனித்த சஞ்சு சாம்சன் “சாரிமா தெரியாம அடிச்சுட்டேன்” என்பது போல அந்த பெண் ரசிகையைப் பார்த்து கை அசைத்து மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவத்தை அங்கிருந்த கேமராமேன் படம் பிடித்த நிலையில், இதற்கான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், நேற்று நடந்த போட்டியில் எந்த அளவுக்கு அதிரடியாக விளையாட முடியுமோ அந்த அளவுக்குப் போட்டிப் போட்டு சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரும் வானவேடிக்கை கட்டிக்கொண்டு இருந்தார்கள். இவர்களுடைய அதிரடியான ஆட்டம் காரணமாகத் தான் கடைசி போட்டியிலும் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.