அமைதியை நிலைநாட்ட மியன்மார் ராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆஸ்திரேலியா வலியுறுத்தல்
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்கள் தங்கள் வழிமுறையை மாற்றிக்கொண்டு, உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஜூலை 27ஆம் திகதி வலியுறுத்தியுள்ளார்.
உலகளாவிய விவகாரங்களைச் சமாளிப்பது குறித்துக் கலந்துரையாடுவதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் லாவோசில் கூடியுள்ள வேளையில் அவரது கருத்து வெளிவந்துள்ளது.மியன்மாரில் நிலவும் சர்ச்சை குறித்து ஆஸ்திரேலியா ஆழ்ந்த கவலையடைவதாகத் பென்னி வோங் கூறினார்.
2021ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் ராணுவ ஆட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியது முதல் மியன்மாரில் நிலைமை மோசமாக உள்ளது.முன்னதாக, அங்கு அமைதியைக் கொண்டுவருவதற்காக ஆசியான் முன்மொழிந்த ஐந்து அம்சத் திட்டத்தைப் பின்பற்ற ராணுவ ஆட்சியாளர்கள் கடப்பாடு தெரிவித்தனர். அந்தக் கடப்பாட்டை அவர்கள் கட்டிக்காக்க வேண்டுமென்று அமைச்சர் வோங் வலியுறுத்தினார்.
மியன்மாரில் நிலவும் சர்ச்சையால் விளைந்துள்ள நிலையற்றதன்மை, பாதுகாப்பற்ற சூழல், மரணங்கள், வலி ஆகியவற்றைக் காணமுடிவதாகச் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
லாவோசில் ஜூலை 27ஆம் திகதி நடைபெறும் கிழக்காசிய உச்சநிலை மாநாடு மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் ஆசியான் வட்டாரக் கருத்தரங்கில் ரஷ்யா, சீனா, ஜப்பான், பிரிட்டன் உட்படப் பல்வேறு நாடுகள் கலந்துகொள்கின்றன.அந்தச் சந்திப்புகளில் கலந்துகொள்ளச் சென்றுள்ள ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர், “மியன்மாரில் நிலவும் சர்ச்சைகள் நீடிப்பது ஆட்சியாளர்களுக்கோ மக்களுக்கோ உகந்ததன்று என்பதே ஆஸ்திரேலியா மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்களுக்குத் தெரிவிக்க விரும்பும் செய்தி,” என்றார்.
மியன்மாரில் நிலவும் சர்ச்சையால் ஏறக்குறைய 2.6 மில்லியன் பேர் நாட்டை விட்டு வெளியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் வட்டாரங்களில் ஆகாயத் தாக்குதல் நடத்தியதற்காக ராணுவ ஆட்சியாளர்கள் கடுமையான கண்டனத்துக்கு ஆளாயினர். ராணுவம் கொடுஞ்செயல்களில் ஈடுபடுவதாகச் சாடப்பட்டது. ஆனால் ராணுவ ஆட்சியாளர்கள் அக்குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர்.
ஆசியானின் அமைதித் திட்டத்தை மியன்மார் ராணுவ அரசாங்கம் பெரும்பாலும் பின்பற்றவில்லை. அனைத்துத் தரப்புகளும் கலந்துரையாடலுக்கு மறுப்பு தெரிவித்தது ஆசியானின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக விளங்குகிறது.