கொழும்பை உலுக்கிய அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் : 3 சந்தேகநபர்கள் விடுவிப்பு
க்ளப் வசந்தவைக் கொலை செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வெலிபென்ன பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து அவர்கள் நேற்று, மேல் மாகாண தெற்கு பிரிவு விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் கைதான 3 சந்தேகநபர்களும் குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்பில்லாதவர்கள் எனக் கருதி விசாரணைகளிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துருகிரிய சந்தியிலுள்ள வர்த்தக நிலையத்தில் கடந்த 08ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ‘க்ளப் வசந்த’ மற்றும் நயன வசுல விஜேசூரிய என்ற 37 வயதான நபர் ஆகியோர் உயிரிழந்தனர்.
வௌிநாட்டில் வசிக்கும் இருவரின் வழிநடத்தலில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையில் 5 பொலிஸ் குழுக்கள் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
துப்பாக்கி பிரயோகத்தில் பாடகி கே.சுஜீவா மற்றும் க்ளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட நால்வர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.