மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும்
மட்டக்களப்பில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்,நிகழ்நிலை காப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணியானது ஆரம்பமாகி காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஞாபகார்த்த இடம் வரையில் வருகைதந்து அங்கு எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சிவில் சமூகம் என்ற அமைப்பின் ஊடாக இலங்கை அரசானது உடனடியாக அடக்குமுறை சட்டங்களை மீளப்பெறவேண்டும் என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சிவில் சமூகம் சார்பாக முகமட் புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பேரணி சென்றது.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்மொழிவை மீளப்பெறு,உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும்,தகவலை அணுகுவதும் கருத்துச்சுதந்திரமும் எஙகளது அடிப்படை உரிமை,ஊடகத்திற்கு சுதந்திரம் மற்றும் சுயாதீனம் வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க சட்டங்களை உருவாக்குங்கள்,அவர்களை ஒடுக்குவதற்கு அல்ல போன்ற பல்வேறு கோசங்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் முன்னாள் பிரதேச மற்றும் மநாகரசபை உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை நாட்டு மக்கள் பாரியதொரு சவாலான சூழலை கடந்து தங்களது பொருளாதார மற்றும் சமூக வாழ்வை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ள இக்கால பகுதியில் அரசானது அவர்கள் மீது ஈடுகொடுக்க முடியாத பாரிய ஒரு பொருளாதார சுமைகளையும், வாழ்க்கை செலவீனங்களையும், வரிச் சுமைகளையும் சுமத்தியுள்ளதோடு அரசிடம் இருந்து பாதிப்புற்ற மக்களுக்கு பெறக்கூடிய சமூக நலத்திட்டங்களையும் இல்லாது செய்வது அரசு மக்களுக்கு செய்கின்ற பாரியதொரு அநீதியும் உரிமை மீறலும் ஆகும்.
தற்போது அரசு சர்வதேச சமூகம் அல்லது நிதி நிறுவனங்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதை நோக்காக்க கொண்டு செயல்படுவது மக்களுடைய வாழ்வியலையும் பொருளாதார நிலைமையும் கேள்விக்குறிக்கி உள்ளாக்குகின்றன.
இவற்றை எதிர்த்து மக்கள் போராட்டங்களையும் அரசை நோக்கி எழுப்புகின்ற கேள்விகளையும் அடக்குவதற்கான செயல்பாடுகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்கின்றார்கள் என்பதனை மக்களாகிய நாம் நன்கு அறிந்துள்ளோம்.
குறிப்பாக கடந்த காலங்களில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் முடக்கப்பட்டு போராடியவர்கள் மீது அரச படையினர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் அதே போன்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை குறிப்பிடலாம்.
அதேபோன்று எதிர்வரும் காலங்களில் அரசினுடைய முடிவுகளுக்கு திட்டங்களுக்கும் மக்களால் மேற்கொள்ளப்படும் கேள்விகளையும் போராட்டங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கிலே அரசனது பல்வேறுபட்ட அடக்குமுறை சட்ட வரைவுகளை முன்மொழிந்து அதனை பாராளுமன்றத்தின் ஊடாக சட்டமாக்கி மக்களினுடைய அடிப்படை கருத்து சுதந்திரத்தினையும் ஒன்று கூடுவதற்கான சுதந்திரத்தினையும் இல்லாது செய்வதற்காக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்ட வரைவுகளை முன்மொழியப்பட்டுருகின்றன.
அத்தோடு இச்சட்டங்கள் முற்று முழுதாக தகவல்களை அணுகுவதையும் கருத்து தெரிவிப்பதையும் ஊடக சுதந்திரத்தையும் இல்லாது செய்வதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
ஆகவே இது ஒரு ஜனநாயக விழிமியத்தை மீறுகின்ற செயலாகும். ஆகையில் இலங்கை அரசன் முன்மொழிந்திருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை அடக்குமுறை சட்ட வரைவுகளை உடனடியாக மீளப் பெற வேண்டும்