முல்லைத்தீவில் 10 வயதுச் சிறுமியை கடத்த முயற்சி; 23 வயது இளைஞன் கைது
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
இன்று காலை 7 மணியளவில் கைவேலிப்பகுதியில் 10 வயதுடைய சிறுமி தனியார் வகுப்பிற்காக தாயாரினால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் சிறுமியினை அழைத்து கையினை பிடித்துக்கொண்டு முகத்தினை துணியால் பொத்திப்பிடித்த போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
வீதியால் சென்ற மக்கள் இதனை அவதானித்து சத்தமிட்ட போது இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளார்கள்.சிறிது நேரத்தின் பின்னர் கண்விழித்துக்கொண்ட சிறுமியின் தகவலின் படி குறித்த பகுதியினை சேர்ந்த இளைஞனின் பெயரினை சிறுமி கூறியதற்கு இணங்க கிராம அபிவிருத்தி சங்கத்தினர் இளைஞனை அழைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
சத்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 23 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
பாதிக்கப்பட்ட சிறுமியினையும் அவரது தாயாரினையும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு சென்று அங்கு சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய சிறுமி மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.