ஜப்பானில் ஆளும் கட்சி தலைமையகம் மீது தாக்குதல்; நபர் கைது
ஜப்பானியத் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஆளும் கட்சி தலைமையகம் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் அக்டோபர் 19ஆம் தேதி காலை நிகழ்ந்தது.
தலைமையகத்தை நோக்கி அந்த நபர் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஜப்பானில் அடுத்த வாரம் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கலவரத் தடுப்பு வாகனம் மீது ஐந்து அல்லது ஆறு பெட்ரோல் குண்டுகள் விழுந்து வாகனம் தீப்பற்றி எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் தீ உடனடியாக அணைக்கப்பட்டதாகவும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஜப்பானிய ஊடகம் கூறியது.
கைது செய்யப்பட்ட நபர் 40 வயதிலிருந்து 50 வயதுக்கு உட்பட்டவர் என்று நம்பப்படுகிறது.
பிரதமர் அலுவலகத்தின் வளாகத்துக்குள் காரை ஓட்டிச் செல்ல அவர் முயன்றாகவும் வளாகத்தைச் சுற்றி வேலி இருந்ததால் அவரால் நுழைய முடியாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, புகைக் குண்டு ஒன்றை வீச அந்த நபர் முயன்றதாகக் கூறப்படுகிறது.ஆனால் அதற்குள் அதிகாரிகள் அவரைத் தடுத்து கைது செய்தனர்.