இஸ்ரேல் மீது தாக்குதல் தீவிரம் – ஹிஸ்புல்லாவுக்கு ஈரான் பச்சைக்கொடி
இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதற்கு லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு தயாராகியுள்ளது.
அதற்கு ஈரான் புரட்சிக்காவல் படை பச்சைக்கொடி காண்பித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஈரான் புராட்சிக் காவல் படையின் பிரிவான குத்ஸ் படை தளபதி இஸ்மைல் கானி, ஹிஸ்புல்லா செயலாளர் நாயகம் ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட்டில் இந்த வாரம் சந்தித்தபோது இந்த அறிவுறுத்தலை வழங்கி இருப்பதாக பல தரப்புகளை மேற்கோள் காட்டி துருக்கியின் ‘அரபிக் போஸ்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
லெபனானில் இஸ்ரேலின் பரந்த அளவான நடவடிக்கை ஒன்றுக்கு தயாராக வேண்டி இருப்பதை கானி ஒப்புக்கொண்டிப்பதோடு இதற்கு ஹிஸ்புல்லா கடும் பதிலடி கொடுப்பதற்கு வலியுறுத்தப்பட்டிருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
லெபனானில் இஸ்ரேலின் தரைவழி நடவடிக்கைக்கான சாத்தியம் பற்றி அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி இருக்கும் நிலையிலேயே ஹிஸ்புல்லாவின் தயார்படுத்தல்களும் தீவிரம் அடைந்துள்ளது,
ரபாவில் தரைவழி நடவடிக்கையை முடித்த பின் இஸ்ரேல் அதன் வடக்கு எல்லையில் தனது தாக்குதலை விரிவுபடுத்தும் என்பது அமெரிக்காவின் கணிப்பாக உள்ளது. இத்தகைய தாக்குதல் வசந்த காலத்தின் பிற்பகுதியில் அல்லது கோடையின் ஆரம்பத்தில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
காசா போரை ஒட்டி ஏற்கனவே லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலிய படை தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. லெபனானின் தெற்கு கிராமமான கப்ராவில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல் ஒன்றில் ஆடவர் ஒருவரும் அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.