அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்திற்குள் வாகனம் புகுந்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வந்தது.
அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக அந்த கூட்டத்திற்குள் அதிவேகத்தில் ஒரு கார் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது பலமாக மோதியது. இந்த சம்பவத்தில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே வேகமாக கூட்டத்தில் மோதிய காரின் டிரைவர், திடீரென தனது துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சுடத்தொடங்கியதாக ஊடகங்களில் தகவல் கூறப்பட்டுள்ளத
இந்த சம்பவம் தொடர்பாக நியூ ஓர்லேன்ஸ் காவல் துறை (NOPD) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையின்படி மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியிருக்கலாம். காயங்கள் தற்போது உறுதிப்படுத்தப்படாத நிலையில், இறப்புகள் அதிகமாக பதிவாகி உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை வெளியாகவில்லை. அங்கிருந்த போர்பன் தெருவில் புத்தாண்டைக் கொண்டாட ஆயிரக்கணக்கானோர் கூடியதாக கூறப்படுகிறது. அவசரகால குழுக்கள் நெருக்கடியை சமாளிப்பதால், இப்போதைக்கு அந்தப் பகுதியில் பயணிப்பதை தவிர்க்குமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.