காசாவிற்குள் துருப்புக்களும் டாங்கிகளும் ஆழமாக நுழைவதால்,குடியிருப்பாளர்கள் தப்பிச் செல்ல தற்காலிக பாதை

இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் உள்ள காஸா நகரத்தில் பெரிய அளவிலான நில வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.இந்நிலையில், இஸ்ரேலிய அரசாங்கம் காஸா நகரில் வாழும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறத் தற்காலிகப் பாதையைத் திறந்துள்ளது
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) அதிகாலை இஸ்ரேலிய ராணுவம் காஸா நகரத்தில் குண்டு மழை பொழிந்தது. அதன் பின்னர் நகரின் முக்கிய இடங்களிலும் இஸ்ரேலியப் படை புகுந்தது.
சாலா அல்தீன் ஸ்திரீட் பகுதி தற்காலிகமாகத் திறக்கப்படுகிறது. அது 48 மணி நேரம் திறக்கப்பட்டு இருக்கும்,என்று இஸ்ரேலிய ராணுவம் புதன்கிழமை (செப்டம்பர் 17) தெரிவித்தது.தற்காலிகமாகத் திறக்கப்பட்ட வழியில் காஸா நகர மக்கள் கடற்கரையை ஒட்டிப் பயணம் மேற்கொள்ளலாம். அது அவர்களைத் தென் பகுதியில் உள்ள மனிதாபிமான உதவிகள் கிடைக்கும் இடமான அல் மாவாசிக்கு கொண்டு செல்லும், என்று இஸ்ரேலிய ராணுவத்தின் பேச்சாளர் கூறினார்.
சாலா அல்தீன் ஸ்திரீட் காஸாவின் வடக்குப் பகுதியிலிருந்து தென் பகுதி வரை செல்லக்கூடியது.
ஐக்கிய நாட்டு நிறுவனம் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நடக்கிறது என்று குற்றஞ்சாட்டிய பிறகும் தனது தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை.இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உள்ளிட்ட மற்ற சில தலைவர்கள் இனப்படுகொலை நடக்கக் காரணமாக உள்ளனர் என்றும் ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறிவருகிறது.
ஆகஸ்ட் மாதம் இறுதி நிலவரப்படி, கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் காஸா நகரத்தையும் அதன் சுற்று வட்டாரத்தையும் சுற்றி வாழ்ந்ததாக ஐநா மதிப்பிட்டுள்ளது.இந்நிலையில், காஸா நகரத்திலிருந்து 350,000க்கும் அதிகமானவர்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
‘எந்த இடமும் காஸாவில் பாதுகாப்பானதாக இல்லை. இப்படி இடத்தை மாற்றி மாற்றி அலைவதற்கு வீட்டில் இருந்தவாறே இறக்கிறோம்,’ என்று காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.