தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணியை கைது செய்ய உத்தரவு

தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல். இவர் கடந்த டிசம்பர் மாதம் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர நிலை உத்தரவை அதிபர் திரும்பப்பெற்றார்.
இதையடுத்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நாட்டில் அவரச நிலையை பிரகடனப்படுத்தி கிளர்ச்சிக்கு நிகரான குற்ற செயலில் ஈடுபட்டதாக முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹி . இவர் மீதும் லஞ்சம், பங்குச்சந்தை முறைகேடு, தேர்தலில் வேட்பாளர்களை தேர்தெடுப்பதில் தலையிடுதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் சாட்சியங்கள், ஆதாரங்களை அழிக்க கிம் கியோன் ஹி முயற்சிப்பதாக சியோல் மத்திய மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று கோர்ட்டில் மீண்டும் வந்தது. அப்போது கிம் கியோன் ஹியை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கிம் கியோன் ஹி இன்றே கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.