அமெரிக்க மத்தியஸ்தத்தில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஆர்மீனியா ,அஜர்பைஜான்

அமெரிக்கா முன்னெடுத்த கலந்துரையாடல் மூலம் அஸர்பைஜானும் ஆர்மீனியாவும் அமைதி உடன்பாட்டைச் செய்துகொண்டன. அதிபர் டோனல்ட் டிரம்புடனான சந்திப்பின்போது வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) அந்த உடன்பாடு எட்டப்பட்டது.
அஸர்பைஜானுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையிலான அமைதி உடன்பாடு நீடித்தால் டிரம்ப் நிர்வாகத்துக்கு அது பெரும் வெற்றியாகக் கருதப்படும்.
“கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாகச் சண்டையிட்ட நாடுகள் இப்போது நண்பர்களாகிவிட்டன. அவை இன்னும் நீண்டகாலத்துக்கு நண்பர்களாக இருக்கும்,” என்றார் டிரம்ப்.
வெள்ளை மாளிகையில் செய்துகொள்ளப்பட்ட அமைதி உடன்பாட்டை அஸர்பைஜான் அதிபர் இல்ஹம் அலியேவ்வும் ஆர்மீனியப் பிரதமர் நிக்கோல் பஷின்யனும் பார்வையிட்டனர்.
1980களிலிருந்து ஆர்மீனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையே சண்டை நிலவியது.
அஸர்பைஜான் வட்டாரத்திற்கு உட்பட்ட நகோர்னோ-கராபாக் என்ற மலைப்பகுதியில் ஆர்மீனியர்கள் என தங்களை கருதுவோர் அதிகம் வாழ்ந்தனர். அவர்கள் ஆர்மீனியாவின் ஆதரவுடன் அஸர்பைஜானைவிட்டு பிரிந்தனர்.
2003ஆம் ஆண்டு அஸர்பைஜான் அந்த வட்டாரத்தை முழுமையாக மீண்டும் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆர்மீனியர்களாகத் தங்களைக் கருதும் 100,000 பேர் ஆர்மீனியாவில் தஞ்சம் புகுந்தனர்.
தற்போது அந்த இரு நாடுகளும் சண்டையை நிறுத்தவும் அரசதந்திர உறவை வரவேற்கவும் ஒப்புக்கொண்டன என்றார் டிரம்ப்.
எரிசக்தி, வர்த்தகம், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த அமெரிக்கா இரு நாடுகளுடனும் தனித்தனி ஒப்பந்தங்களைச் செய்தது.