மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு
மடிக்கணினி என்பது பல்வேறு இடங்களுக்கு எளிதாகக் கொண்டு செல்லக்கூடிய ஒரு சாதனம். உள்ளமைக்கப்பட்ட விசைப்பலகை, டச்பேட், ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோஃபோனை இது கொண்டுள்ளது.
அதனால் டெஸ்க்டாப் கணினியை விட மடிக்கணினியை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், அதை மடியில் வைக்காமல் எதிரே இருக்கும் மேசையில் வைத்துப் பயன்படுத்துவதே சிறந்தது. மடியில் வைத்துப் பயன்படுத்துவதால் என்னென்ன ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
1. மடிக்கணினி செயல்படும் போது அதில் உருவாகும் வெப்பம் ஒரு சிறிய மின் விசிறி மூலம் வெளியேற்றப்படும். அதனை மடியில் வைத்துப் பயன்படுத்தினால், அந்த இடத்தில் கருவியின் வெப்பம் முழுதும் பரவும். இதனால் எரித்மா என்கிற தோல் சிவந்து கன்றிப் போகும் குறைபாடு வரும். அதீத பயன்பாடு தோல் புற்றுநோய்க்குக் கூட வழிவகுக்கும். அந்த வெப்பக்காற்று வெளியே செல்லும் துளைகளை நம் தொடைகள் அடைத்துக்கொள்வதால் மடிக்கணினியின் பாகங்கள் செயல் இழக்கவும் வாய்ப்பு உண்டு.
2. நீண்ட நேரம் ஒரு குறிப்பிட்ட நிலையில் உட்கார்ந்திருப்பது உடல் சோர்வு, கழுத்து, முதுகு மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். மேலும், நரம்புகள் மற்றும் தசைகளில் இரத்த ஓட்டத்தைக் குறைக்கலாம்.
3. மடிக்கணினியின் திரையில் இருந்து வெளிப்படும் நீல ஒளி தூக்க ஹார்மோனான மெலடோனில் பிரச்னைகளை ஏற்படுத்தும். இது இரவுத் தூக்கத்தை கடினமாக்கி, படிப்படியாக தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
4. மூளையின் செயல்முறைக் கட்டமைப்பை பலவீனப்படுத்தும். சிந்திக்கும் திறனை பாதித்து, அறிவாற்றலை மட்டுப்படுத்தி, மோசமான நினைவாற்றல், பலவீனமான செயல்திறனுக்கு வழிவகுக்கும்.
5. மிக அருகில் இருப்பதால் கண்களை பாதித்து, கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வகை செய்யும். மேலும், கண் எரிச்சல், கண்கள் உலர்ந்து போதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.
6. மன அழுத்தம், பதற்றம், மனச் சோர்வுக்கு ஆளாக நேரிடலாம்.
7. மடியில் வைத்துப் பயன்படுத்தும்போது ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளை சேதப்படுத்தும். பெண்களுக்கு கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கும். கருவுற்ற பெண்களுக்கும் கருவில் உள்ள சிசுவை அதன் ரேடியேஷன் பாதிக்கும். நீண்ட நாள் தாய் மடிக்கணினியை உபயோகித்தால் பிறக்கும் குழந்தைக்கு கற்றல் குறைபாடுகள் ஏற்படலாம்.
எனவே, மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்தாமல், குறிப்பிட்ட தொலைவில் எதிரே உள்ள மேசை மீது வைத்து பயன்படுத்துவதே நன்று.