தோஹாவில் தாக்குதலுக்குப் பின்பு இஸ்ரேல் உறவுகளை மறுபரிசீலனை செய்ய அரபு,முஸ்லிம் தலைவர்கள் வலியுறுத்தல்

கத்தார் தலைநகரில் ஹமாஸ் தலைவர்கள்மீது கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, தோஹாவில் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற அவசர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இஸ்ரேலுடனான உறவை மறுபரிசீலனை செய்ய அரபுநாட்டு, முஸ்லிம் தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
காஸா போர்நிறுத்த முன்மொழிவு குறித்து கத்தாரில் ஹமாஸ் தலைவர்கள் கலந்தாலோசித்தபோது அவர்கள்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, ஏறக்குறைய 60 நாடுகளை ஒன்றிணைத்த அரபு லீக், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டு அமர்வு உறுதியான நடவடிக்கை எடுக்க முற்பட்டது.
இந்த உச்சநிலை மாநாட்டின் ஒரு கூட்டறிக்கை, ‘பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்வதைத் தடுக்க, இஸ்ரேலுடனான அரசதந்திர, பொருளியல் உறவுகளை மறுபரிசீலனை செய்வது, அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவது உட்பட சாத்தியமான அனைத்து சட்ட, பயனுள்ள நடவடிக்கைகளையும் எடுக்க அனைத்து நாடுகளையும்’ வலியுறுத்தியது.
இஸ்ரேலை அங்கீகரிக்கும் கத்தாரின் சக வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், பக்ரேன், எகிப்து, ஜோர்தான், மொரோக்கோ ஆகிய நாடுகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், பக்ரேன், மொரோக்கோ தலைவர்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை. அதற்குப் பதிலாக மூத்த பிரதிநிதிகளை அவர்கள் அனுப்பினர்.
ஐக்கிய நாட்டுச் சபையில் இஸ்ரேலின் உறுப்பியத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளை உறுப்பு நாடுகள் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதையும் அறிக்கை வலியுறுத்தியது.