“அவரது மரணத்தின் நினைவுகள் தாங்கிக் கொள்ள முடியாதவை” தந்தை குறித்து மனம் திறந்த ஏ.ஆர். ரஹ்மான்…
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது தந்தையின் மரணம் குறித்த நினைவுகள் தாங்கிக் கொள்ள முடியாதவை என அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இசை உலகின் ஜாம்பவானாக விளங்கி வரும் ஏ.ஆர். ரஹ்மான், அடிக்கடி தனது தாயார் குறித்து சிலாகித்து பேசுவதை நாம் பார்த்திருப்போம். பெரும்பாலன சூழலில் அவர் தனது தந்தையுடனான நினைவுகள் குறித்து பகிர்ந்து கொண்டதில்லை.
ஆனால், அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் ஏ.ஆர். ரஹ்மான் தனது தந்தை குறித்து மனம் திறந்துள்ளார்.
பழம்பெரும் இசைக்கலைஞரான ஆர்.கே சேகரின் மகனாக தான் வளர்ந்த நினைவுகளை அவர் மக்கள் முன் கூறியுள்ளார். தனது தந்தையின் மரணப் படுக்கை தாங்கிக் கொள்ள முடியாத இருண்ட பக்கங்களைக் கொண்டதால், அது குறித்து தான் பேசுவதில்லை என ஏ.ஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.
மேலும், தந்தையின் மரணத்திற்கு பின்னர் தனது தாயார் மன உறுதியுடன் இருந்து தங்களை வளர்த்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
குறிப்பாக, தன்ராஜ் மாஸ்டருடன் தனது தந்தை மற்றும் இளையராஜா ஆகியோர் பணியாற்றியதை சுட்டிக் காட்டிய ஏ.ஆர். ரஹ்மான், தனது தந்தையின் பரந்த மனப்பான்மை குறித்து இளையராஜா கூறியதை தெரிவித்துள்ளார்.
மேலும், எல். சுப்பிரமணியனுடன் தனது தந்தை ரெக்கார்டிங் சென்றதன் மூலம் கிடைத்த பணம், தனது கல்விக்காக பயன்படுத்தப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், தன் தந்தையின் கனிவான நடத்தை, உதவி செய்யும் மனப்பான்மை, ஊக்குவிக்கும் திறன் உள்ளிட்டவை மூலம் தான் பெரிதும் ஈர்க்கப்பட்டதாக ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஆனால், தன் தந்தையின் இறுதி நொடிகள், தாங்கிக் கொள்ள முடியாத வேதனையை தனக்கு அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அவர் ஆசீர்வாதம் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கிடைத்துள்ளதாக ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்
மற்றொரு புறம், பிரார்த்தனை என்பது இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார். புனிதத் தன்மையுடன் ஒன்றிணையும் போது தான், நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை புரிந்து கொள்கிறோம் என ரஹ்மான் கூறியுள்ளார்.
குறிப்பாக, பிரார்த்தனை இல்லையென்றால் தான் மதிப்பற்றதைப் போன்று உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பிரார்த்தனை செய்வதன் மூலம் தனது எதிர்மறையான சிந்தனைகள் நம்மை விட்டுச் செல்லும் எனவும், மனதில் உள்ள குழப்பங்கள் பிரார்த்தனை மூலம் நீங்கும் எனவும் ரஹ்மான் கூறியுள்ளார்.
அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக தேசிய விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான், தற்போது, தக் லைஃப், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.