இரகசியமாக AI அம்சத்தை உருவாக்கும் ஆப்பிள்? வெளியான இரகசியம்
உலகம் முழுவதுமுள்ள மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது செயற்கை நுண்ணறிவு சேவைகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
ஒருபுறம் Open AI நிறுவனம் அசுர வேகத்தில் செயல்பட்டு வரும் நிலையில், மறுபுறம் நாங்க மட்டும் சும்மாவா என எலான் மஸ்க் X-AI திட்டத்தை கையில் எடுத்துள்ளார். இதில் கூகுள் நிறுவனமும் பார்ட் என்ற ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து பயன்பாட்டில் இருக்கிறது.
இத்தகைய தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அனைவரையும் தொடர்ந்து, புதிதாக ஆப்பிள் நிறுவனமும் தங்களின் ஏஐ சேவையை விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுவரை ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து இது குறித்து எவ்வித அறிவிப்புகளும் வெளிவரவில்லை. ஆனால் அவர்கள் சைலன்டாக தங்களின் ஏஐ தளத்தை வேகமாக உருவாக்கி வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஃபீவர் அதிகமாக பரவி வருகிறது. எதை எடுத்தாலும் AI, AI என்றுதான் கூறுகின்றனர். இந்த ஏஐ பந்தயத்தில் தற்போது முன்னிலையில் இருப்பது ChatGPT தான். அதே சமயம் கிட்டத்தட்ட எல்லா தொழில்நுட்ப நிறுவனங்களும் AI தொழில்நுட்பத்தில் கால் தடம் பதிக்க விரும்புகின்றனர். இவர்களுக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் சத்தம் இல்லாமல் நத்தை போல நகர்கிறது.
அவர்களுக்கான சொந்த ஏஐ தளத்தை உருவாக்குவதில் ஆப்பிள் நிறுவனம் சில முன்னெடுப்புகளை செய்து வருவதாகத் தெரிகிறது. இது உண்மையாக இருக்காது என பல தெரிவித்தாலும், இணையத்தில் லீக்கான சில ஆதாரங்களை வைத்து அது உண்மையாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். அதாவது ஆப்பிள் நிறுவனம் தனது ஏஐ சேவையை அறிமுகம் செய்ய, கைதேர்ந்த திறமைசாலிகளைத் தேடி வருகிறது எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் AI துறையில் இருப்பவர்களை, தனது நிறுவனத்தின் தனிப்பிரிவில் வேகமாக சேர்த்து வருகிறார்களாம்.
இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனம், ஜெனரேட்டிவ் AI துறையில் பல புதிய வேலைகள் இருப்பதாக விளம்பரங்களை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் இப்படி ஒரு செயலை ஆப்பிள் நிறுவனம் செய்யவில்லை. அமெரிக்கா மட்டுமின்றி ஆசியா மற்றும் ஐரோப்பாவிலும் தகுதியான ஆட்களை இதற்காகத் தேர்வு செய்து வருகிறார்களாம்.
ஆனால் இந்நிறுவனத்தின் AI தொடர்பான திட்டங்கள் குறித்த விரிவான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் அவர்களின் செயல்களை வைத்துப் பார்க்கும் போது, விரைவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏஐ அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.