Apple Car கனவு திட்டம் – கைவிட்ட ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்தின் நீண்ட கால கனவுத் திட்டமான ஆப்பிள் எலக்ட்ரிக் கார் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இத்திடத்தில் தங்கள் முழு முயற்சியை போடுவதற்கு பதிலாக, ஏஐ அம்சத்தில் ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்தப் போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அவர்களின் முதல் எலக்ட்ரிக் கார் கனவு திட்டத்தை 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக முயற்சித்து வந்தனர். ஆனால் இத்திட்டத்தில் அவர்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காததால் இதைக் கைவிடுவதாக இப்போது அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு எத்தனை ஆண்டுகளாக ஆப்பிள் காரை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்ந்து நிறுவனம் AI திட்டங்களில் தங்கள் கவனத்தை செலுத்த உள்ளார்களாம்.
ப்ராஜெக்ட் டைட்டன் என்ற பெயரில் எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வந்த ஆப்பிள் நிறுவனம், அதன் ரகசியங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தது. அவ்வப்போது இந்த காரில் வரவுள்ள அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியே கசிந்து, மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இத்திட்டம் முன்னேற்றம் காணாததால், இதைக் கைவிட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என ஆப்பில் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, தற்போது உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் AI சேவைகளில் களமிறங்கவுள்ளது. இன்றைய காலத்தில் தானாக இயங்கும் காரை உருவாக்குவது கடினமாக இருப்பதால் ஆப்பிள் நிறுவனம் எலக்ட்ரிக் கார் திட்டத்தை கைவிட்டு, AI பக்கமாக செல்லத் தயாராகியுள்ளது. இதன் மூலமாக ஆப்பிள் இப்போதைக்கு எலக்ட்ரிக் கார் சந்தையில் நுழையப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திடம் சொல்லும்படியாக ஏஐ அம்சங்கள் இல்லை என்பதால், முதலில் அதை உருவாக்கிவிட்டு, ஏஐ அம்சங்கள் பொருந்திய எலக்ட்ரிக் வாகன திட்டத்தில் முயற்சிகளை எடுக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் AI அம்சங்களைக் கொண்டு இன்னும் கூடுதல் தரத்தில் எலக்ட்ரிக் வாகனத்தை உருவாக்க முடியும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெக் வட்டாரங்கள் கூறுகிறது.
ஒருவேளை அவர்களுக்கென்று பிரத்தியேகமாக ஏஐ அம்சத்தை ஆப்பிள் உருவாக்கி விட்டால், அதை பயன்படுத்தி தானாக இயங்கும் காரை இன்னும் சிறப்பாக மேம்படுத்தலாம் என்பதும் ஆப்பிள் மாஸ்டர் பிளானாக இருக்கலாம்.