தமிழரசுக் கட்சிக்கு அநுர தூது: நடக்கப்போவது என்ன?
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். இதற்கமைய அடுத்த வாரம் புதன் அல்லது வியாழன் மேற்படி சந்திப்பு இடம்பெறக்கூடும் என தெரியவருகின்றது.
ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள சந்திப்புக்கு நல்லிணக்க சமிக்ஞையை வெளிப்படுத்தும் விதமாகவே வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நேற்று விலகி இருந்தனர்.
தேசிய இனப்பிரச்சினைக்குரிய அரசியல் தீர்வு, புதிய அரசமைப்பு, காணி விடுவிப்பு, மாகாணசபைத் தேர்தல் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு தமிழரசுக் கட்சி திட்டமிட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் ஊடாக தீர்வு காணப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, காணி விடுவிப்பில் ஓரளவு முன்னேற்றம் தென்பட்டாலும் அரசாங்கம் மேலும் செயல்பட வேண்டியுள்ளது என தமிழ்க் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.





