தொலைபேசி அழைப்பை நிராகரிக்கும் அநுர: கடும் கவலையில் மனோ!
ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் தனது தொலைபேசி அழைப்புகளுக்கு அநுரகுமார திஸாநாயக்க பதிலளிப்பதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் TPA தலைவர் மனோ கணேசன் Mano Ganesan கவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் மனோ கணேசன் Mano Ganesan கூறியவை வருமாறு,
“மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் நடத்துவதற்குரிய யோசனைக்கு நாம் ஆதரவளித்தோம். எதிரணியில் இருக்கும்போது தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அதற்கு ஆதரவளித்தார்.
எனினும், தற்போது அவர்களின் நிலைப்பாடு மாறியுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை.
எதிரணியில் இருக்கும்போது வாரம் ஒருமுறையாவது இரவு 10 மணிக்கு மேல் அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, கலந்துரையாடுவார்.
ஆனால் அவர் ஜனாதிபதியான பின்னர் நான் அழைப்பை ஏற்படுத்தினால்கூட பதில் இல்லை. பரவாயில்லை.
மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் நடத்துவதற்குரிய தனிநபர் சட்டமூலம் உள்ளது. அதனை அரசாங்கம் தமது சட்டமூலமாக கொண்டுவர வேண்டும். இதற்குரிய கோரிக்கையை நாம் முன்வைப்போம். மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட்டாக வேண்டும்.” – என்றார் மனோ கணேசன்.





