மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்? பதற்றத்தை ஏற்படுத்திய TikTok சோதிடர்

மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் என ஆரூடம் கூறி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்திய சோதிடரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இம்மாதம் 21ஆம் திகதி மியன்மாரில் உள்ள அனைத்து நகரங்களையும் நிலநடுக்கம் உலுக்கும் என்று ஜான் மோ TikTokஇல் கூறியிருந்தார்.
அந்தக் காணொளி இம்மாதம் 9ஆம் திகதி TikTokஇல் பதிவேற்றம் செய்யப்பட்டது. அது சுமார் 3 மில்லியன் முறை பார்க்கப்பட்டது.
கட்டடங்கள் ஆட்டம் காணும்போது முக்கியமான பொருள்களை எடுத்துக்கொண்டு ஓடிவிடுமாறு ஜான் மோ காணொளியில் குறிப்பிட்டார். பகலில் உயரமான கட்டடங்களில் இருக்கவேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.
அதை நம்பிய பலரும் ஏப்ரல் 21ஆம் திகதி வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான கருத்துகளைச் சொல்லியதற்காக ஜான் மோ கைது செய்யப்பட்டார் என்று மியன்மாரின் தகவல் அமைச்சு விளக்கியது.
சென்ற மாதம் 28ஆம் திகதி மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கத்தில் சுமார் 3,500 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.