உயிரிழந்த மதப் போதகரின் மற்றுமொரு சீடரும் தற்கொலைக்கு முயற்சி
மத தீவிரவாத விரிவுரைகளை வழங்கிய ருவான் பிரசன்னவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மற்றுமொருவர் விஷம் அருந்தியுள்ளார்.
திம்புலாகல, சிறிபுர பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர் சிகிச்சை பெற்று இன்று (05) காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திம்புலாகலை சிறிபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் விஷம் அருந்தியதால் நேற்று (04) தெஹியத்தகண்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை ருவான் பிரசன்னவின் தீவிரவாத விரிவுரைகளில் கலந்து கொண்டதாகவும் அண்மையில் ருவானின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதாகவும் சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
பணப்பிரச்சனை காரணமாக விஷம் குடித்ததாக அந்த நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, தீவிரவாத மத விரிவுரைகள் மற்றும் போதனைகளை வழங்கி தற்கொலை செய்து கொண்ட ருவன் பிரசன்ன குணரத்ன தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
குறித்த நபர் வேறு நிறுவனங்களிடம் பணம் பெற்றுள்ளாரா என்பதை அறிய, பணம் எவ்வாறு பெறப்பட்டது மற்றும் எவ்வாறு பணம் செலவிடப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.