கொரோனாவில் தப்பித்தவர்களுக்கு காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து!
கொரோனாவில் உயிர் தப்பிய நபர்களுக்கு, நுரையீரல் பிரச்சனை ஏற்படுவதாக அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த 2019ல் பரவத் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி, லட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டது. உலகம் முழுவதும் இந்த நோயின் தீவிரம் காரணமாக பொது முடக்கம் கொண்டுவரப்பட்டு, குறுகிய காலத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டிருந்தாலும் பல பக்கவிளைவுகளை சந்தித்து வருவதாக உலகளாவிய ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் நமது தமிழகத்தில் உள்ள, வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த சீனா, ஐரோப்பா நாட்டில் உள்ள மக்களை விட, இந்தியர்களுக்கு அதிக அளவில் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நுரையீரல் பாதிப்பு சிலருக்கு ஒரு ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும், ஒரு சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தொடரும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
இதனால், மக்களின் உயிரை பலி கொண்ட கொடூர கொரோனா வைரஸிலிருந்து, எப்படியோ தப்பித்திருந்தாலும், அதன் பக்க விளைவுகளால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற தகவல், அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு ஏதேனும் நுரையீரல் சார்ந்த பிரச்சினை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.