இலங்கையில் வாழ்க்கைச் செலவு மேலும் குறையும் என அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணையை பெற்றுக்கொள்வது இலங்கையின் எதிர்கால பொருளாதாரம் குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு நம்பிக்கையான செய்தியை அனுப்பும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் பேசிய அவர், ஊழல் ஒழிப்பு, நிதி ஒழுக்கத்தைப் பேணுதல், வெளிப்படைத் தன்மையை உருவாக்குதல் உள்ளிட்ட நிதி நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எதிர்காலத்தில் பெறப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பிரவேசித்துள்ளதாக தெரிவித்த ஷெஹான் சேமசிங்க, எதிர்காலத்தில் வாழ்க்கைச் செலவு மேலும் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்காலத்தில் வங்கி வட்டி வீதத்தை 09 வீதத்திற்கும் கீழ் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பேராசிரியர் ஆஷு மாரசிங்க வலியுறுத்தியுள்ளார்.