காசாவில் குறைந்தது 11 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!
காசாவில் நடந்து வரும் மோதல் நிலைமையில் குறைந்தது 11 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் பத்திரிக்கையாளர்களை பாதுகாப்பதற்கான குழுத் தெரிவித்துள்ளது.
காசாவில் அல்லது அதற்கு அருகாமையில் கொல்லப்பட்ட, காயமடைந்த மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் பற்றிய கூடுதல் அறிக்கைகளை இந்தக் குழு விசாரித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் மத்திய கிழக்கிற்கான ஒருங்கிணைப்பாளர் ஷெரிப் மன்சூர், காசாவில் உள்ள ஊடகவியலாளர்கள் தங்கள் குடும்பங்களை வெளியேற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் துடிக்கும்போது தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர் என்றார்.
பலர் தங்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் இழந்துள்ளனர், மேலும் சிலர் மருத்துவமனையில் வேலை செய்கிறார்கள், ஏனெனில் அவர்கள் மின்சாரம் மற்றும் இணையத்தைப் பெறக்கூடிய ஒரே இடம் அங்குதான் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.