இலங்கை – மாலைதீவு கூட்டு ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு!
இலங்கை – மாலைதீவு கூட்டு ஆணைக்குழுவின் 4 ஆவது கூட்டத்தொடர் இன்று (6) ஆரம்பமாகி நாளைய தினமும் (7) நடைபெறவுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடருக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் ஆகியோர் தலைமைதாங்கவுள்ளனர்.
அதேவேளை இன்றைய தினம் மேற்படி கூட்டு ஆணைக்குழுவின் அமைச்சுமட்ட சிரேஷ்ட அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது இருநாகளுக்கும் இடையிலான நல்லுறவில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம், புதிய செயற்திட்டங்கள், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா, மீன்பிடி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, திறன் அபிவிருத்தி என்பன உள்ளடங்கலாக இருநாடுகளினதும் அக்கறைக்குரிய துறைகள் மற்றும் விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி இக்கூட்டு ஆணைக்குழுவின் கூட்டத்தொடரை அடுத்து இருநாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.