இலங்கை மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு!
 
																																		எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கையில் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
குறித்த பரிந்துரைகளை இறுதி செய்யும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர், பொறியியலாளர் ஏ.டி.கே. பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 22 ஆம் திகதிக்கு முன்னர் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபையை அறிவுறுத்தியிருந்தது.
பின்னர் மேலும் இரண்டு வாரகால அவகாசத்தை வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரியிருந்தது.
அதற்கமைய, எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னதாக குறித்த பரிந்துரைகளை முன்வைக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு கால அவகாசம் வழங்கியிருந்தது.
தற்போது நடைமுறையில் உள்ள முறைமைக்கு அமைவாக 6 முதல் 11 சதவீதம் வரையான மின்சாரக் கட்டண குறைப்பு தொடர்பான பரிந்துரையை இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்னதாக சமர்ப்பித்திருந்தது.
எனினும் குறித்த பரிந்துரையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரையை ஆராய்ந்து அனுமதி வழங்கவுள்ளது.
 
        



 
                         
                            
