ஆந்திரா- தேரோட்டத்தின் போது மின்சாரம் பாய்ந்தில் 13 குழந்தைகள் படுகாயம்!
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் யுகாதியை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
தெலுங்கு புத்தாண்டான உகாதி தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள டெக்கூர் கிராமத்தில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
அப்போது உயர் மின்னழுத்த மின் கம்பியில் தேர் உரசி 13 குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, கர்னூலில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். குழந்தைகளின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இருப்பினும் தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கர்னூல் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் கிரண் குமார் ரெட்டி கூறுகையில், “இன்று காலை யுகாதி உற்சவம் கொண்டாட்ட நிறைவு விழாவின்போது மின்சாரம் பாய்ந்து 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர். மருத்துவர்கள் தகவல்படி, அனைவரின் தீக்காயங்களும் 10 சதவீதத்துக்கும் குறைவான தீவிரத்தன்மை கொண்டவை. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை” என்றார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், பன்யம் எம்எல்ஏ-வுமான கடசானி ராமபூபால் ரெட்டி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நந்தியாலா தொகுதி வேட்பாளர் பைரெட்டி ஷபரி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த குழந்தைகளை சந்தித்தனர். அப்போது, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்.
தேரில் மின்சாரம் பாய்ந்து 13 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.