லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ஹிஸ்புல்லா மூத்த ராணுவத் தலைவர் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்
லெபனானியத் தலைநகர் பெய்ரூட்டில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த ராணுவத் தலைவர் ஒருவரும் இதர மூத்த உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.
லெபனான் எல்லையைச் சுற்றிய பகுதிகளை தம்மால் கைப்பற்ற முடியும் வரை புதிய ராணுவ நடவடிக்கையை தொடரப் போவதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.
வான்வழித் தாக்குதலில் இப்ராகிம் அகில் எனும் அந்த மூத்த ராணுவத் தலைவரும் இதர மூத்த உறுப்பினர்களும் கொல்லப்பட்டதை இஸ்ரேலிய ராணுவமும் லெபனானில் உள்ள ஒரு பாதுகாப்புத் தரப்பும் உறுதிப்படுத்தின. இதனால், இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
வான்வழித் தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாக லெபனானிய சுகாதார அமைச்சு தெரிவித்தது. மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் பணியில் ஈடுபட்ட நிலையில், மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.முன்னதாக, குறைந்தது 66 பேர் காயமுற்றதாகவும் அவர்களில் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததாகவும் ராணுவம் கூறியிருந்தது.
இஸ்ரேலியத் தாக்குதல் குறித்தோ அகிலின் மரணத்தை உறுதிப்படுத்தும் விதமாகவோ ஹிஸ்புல்லா அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
அகில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் இரு நிலைகளைக் குறிவைத்து வெள்ளிக்கிழமை இரவு 8.40 மணிக்கு எறிபடைகளை ஹிஸ்புல்லா பாய்ச்சியதாக அதன் ஊடக அலுவலகம் இரு அறிக்கைகளை வெளியிட்டது.