சிங்கப்பூரில் கட்டுமான பணியிடத்தில் இந்தியர் பலி!
சிங்கப்பூரில் கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
சிங்கப்பூரின் பாசிர் ரிஸ் இண்டஸ்ட்ரியல் டிரைவ் 1 எனும் பகுதியில் கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 34 வயதான இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேபிள் டிரம்மை தாங்கி நிற்கும் எஃகு விலகியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த Alliance E&C எனும் நிறுவனத்தில் பணிபுரியும் அந்த நபர், சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால், சிகிச்சை பலனின்று அவர் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய தொழிலாளி உயிரிழந்ததையடுத்து, கட்டுமான மற்றும் சாலைப்பணி நிறுவனமான ஹாங் ஹாக் குளோபல், அங்கு அனைத்து கேபிள் பதிக்கும் பணிகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
“பொது பாதுகாப்பு நடவடிக்கையாக, கேபிள் டிரம் மற்றும் அதன் துணை அமைப்புகள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.” என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாகவும் அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சிங்கப்பூரில் நடப்பாண்டில் இதுவரை சுமார் 19 வேலை தொடர்பான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டில் 30ஆகவும், 2021ஆம் ஆண்டில் 37ஆகவும், 2022ஆம் ஆண்டில் 46ஆகவும் இருந்தது.
பணியிட பாதுகாப்பு, சுகாதாரச் சட்டங்களை மீறினால் மரணம் அல்லது கடுமையான காயம் ஏற்படக்கூடிய பட்சத்தில் அதிகபட்ச அபராதம் 20,000 சிங்கப்பூர் டாலரில் இருந்து 50,000 சிங்கப்பூர் டாலராக உயர்த்தப்படும் என மனிதவள அமைச்சகத்தின் அமைச்சர் ஜாக்கி முகமது கூறியுள்ளார்.