இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களுக்கு மத்தியில், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
கிழக்கு சிரியாவில் ஈரானியப் படைகள் மற்றும் நட்புக் குழுக்களால் பயன்படுத்தப்படும் இரண்டு இலக்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.
எனினும், இஸ்ரேல்-ஹமாஸ் நெருக்கடியில் அமெரிக்காவின் தலையீட்டின் பின்னணியில் இத்தகைய தாக்குதலை நடத்துவது சர்ச்சைக்குரியது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள இராணுவ தளங்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 21 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக பென்டகன் உறுதி செய்துள்ளது.
ஏற்கனவே சிரியாவில் 900 அமெரிக்க இராணுவ வீரர்களும், ஈராக்கில் 2,500 மராணுவ வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் 900 பேரை சேர்க்க தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கமேனிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரத்தில் மட்டும் ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா 16 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பென்டகனும் உறுதி செய்துள்ளது.