கிரீன்லாந்தில் அதிசயமான நிகழ்வு: வீடுகளை நெருங்கும் மிகப்பெரிய பனிப்பாறை!

கிரீன்லந்தில் உள்ள இன்னார்சுட் எனும் சிறிய மீனவர் கிராமத்தில் வித்தியாசமான மற்றும் ஆபத்தான இயற்கை நிகழ்வு ஒன்று பதிவாகியுள்ளது.
200க்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட இந்த கிராமத்தில் பனிப்பாறை ஒன்று வீடுகளுக்கு மிக அருகில் வந்து நிற்கிறது. இது எந்த நேரமும் மோதக்கூடிய அளவிற்கு உள்ளது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
New York Post வெளியிட்ட தகவலின்படி, இந்த பனிப்பாறை சுமார் ஒரு வாரமாக அதே இடத்தில் அசையாமல் நிற்கிறது. இதனால் கிராம மக்கள் மற்றும் அதிகாரிகளில் பதட்டம் நிலவுகிறது.
அமைதியாகத் தோன்றும் இந்த பனிப்பாறை உடைந்துவிட்டால், கடல்நீரில் பெரும் அலைகள் எழுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் பனிப்பாறையை அணுகக்கூடாது என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கு முந்தையதாக, 2018-ம் ஆண்டிலும் ஒரு பெரிய பனிப்பாறை இன்னார்சுட் கிராமத்தை நெருங்கியதைக் குறிப்பிடத்தக்கது. அப்போது, கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். கடும் காற்றின் தாக்கத்தில் அந்த பனிப்பாறை சில நாட்களிலேயே நகர்ந்து சென்றது.
தற்போது நிகழும் இந்த நிகழ்வும் பனி வீழ்ச்சியால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளுக்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.