வருவாயை அதிகரிக்க தாய்லாந்து ரயில்களில் மதுபானம்; பாதுகாப்பு குறித்து நிபணர்கள் கவலை
தாய்லாந்து மாநில ரயில்வே (எஸ்ஆர்டி) வருவாயை அதிகரிக்கவும் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும் ரயில்களில் மதுபானங்கள் விற்பனை செய்யும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. எஸ்ஆர்டியின் முன்மொழிவு தற்போது மதுபானக் கட்டுப்பாட்டுக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
ரயில்களில் மது விற்பனை செய்வது அரசாங்கத்தின் சுற்றுலா ஊக்குவிப்பு முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது என்றும் அரசு நிறுவனங்களின் நிதிச் சிக்கல்களைத் தணிக்க உதவும் என்றும் எஸ்ஆர்டி வாதிடுகிறது.
ரயில்களில் மதுபானங்களை வழங்குவது அதிக பயணிகளை ஈர்க்கும் மற்றும் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்றும் அது கூறியது.இருப்பினும், இந்த திட்டம் பொதுச் சுகாதார, பாதுகாப்பு நிபுணர்களின் மத்தியில் கவலைகளை எழுப்பியுள்ளது.
ரயில்களில் மது அருந்துவதை அனுமதிப்பது குடிப்பழக்கம், ஒழுங்கற்ற நடத்தை மற்றும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
இந்த நிலையில் பொதுச் சுகாதார அமைச்சர் சோம்சக் தெப்சுதின், “வருவாயை அதிகரிக்க எஸ்ஆர்டியின் விருப்பத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும், நாம் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
“ரயில்களில் மது அருந்துவதை அனுமதிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளை, குறிப்பாக பயணிகளின் பாதுகாப்பு குறித்து நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, மதுபானக் கட்டுப்பாட்டுக் குழு, ரயில்களில் மதுபானம் அனுமதிப்பது குறித்து சாத்தியமான பிரச்சினைகள், நன்மைகளை கவனமாகப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளது