‘மத்திய கிழக்கு போர்’ – மசூதிக்கு சென்ற ஆஸ்திரேலிய பிரதமருக்கு கடும் எதிர்ப்பு!
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸும் Anthony Albanese , அமைச்சர் டோனி பர்க்கும் Tony Burke சிட்னியிலுள்ள லக்கம்பா மசூதியில் நடைபெற்ற ஈத் பெருநாள் வழிபாட்டில் கலந்துகொண்டபோது, அங்கிருந்த ஒரு சிறிய குழுவினரால் கடுமையான எதிர்ப்புகளையும் கூச்சல்களையும் எதிர்கொண்டனர்.
காசா மற்றும் லெபனான் விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து ஒரு சிலர் கோஷங்களை எழுப்பினர். அரசின் மனிதநேயமற்ற நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பையும் வெளியிட்டனர்.
மசூதியில் கோஷங்களை எழுப்பிய தரப்பினரை அங்கிருந்தவர்கள் கட்டுப்படுத்தினர்.
இவ்வாறு எதிர்ப்பு கிளம்பி இருந்தாலும் பெரும்பாலான மக்கள் தங்களை இனிமையாக வரவேற்றதாக பிரதமர் அல்பானீஸ் விளக்கமளித்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்தினரிடையே நிலவும் ஆழ்ந்த கோபத்தையும் ஏமாற்றத்தையும் அரசாங்கம் நேரடியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக மசூதி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்களைப் புனித இடங்களுக்கு அழைப்பது சமூகத்தில் மாறுபட்ட கருத்துகளை உருவாக்கியுள்ள நிலையில், ஜனநாயக ரீதியாகக் குரல் எழுப்ப இது ஒரு தளம் என்று நிர்வாகம் இதனை ஆதரிக்கிறது.
காசாமீதான தாக்குதல் காரணமாக கடந்த வருடம் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட சமீபத்திய சட்ட நடவடிக்கைகளே இத்தகைய எதிர்ப்புகளுக்குக் காரணம் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.




