அமெரிக்காவில் முடங்கும் விமான சேவைகள் – சம்பளமின்றி தவிக்கும் மில்லியன் கணக்கான ஊழியர்கள்
அமெரிக்காவில் விமானச் சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் ஷான் டபி (Sean Duffy) உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அரசாங்க நிர்வாக முடக்கம் நீடிப்பதால், இன்றிலிருந்து விமான சேவைகளை மட்டுப்படுத்துமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த முடக்கம் காரணமாக போக்குவரத்துத் துறையில் நிலவும் நெருக்கடியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 40 விமான நிலையங்களில் சுமார் 10 வீத விமானச் சேவைகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விமான நிலையங்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து ஆணையம் (FAA) அறிவித்துள்ளது.
அரசாங்க முடக்கத்தால் சுமார் 13,000 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 50,000 போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக குறித்த ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்காமையினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் பாரியளவில் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று அமைச்சர் டபி முன்னதாகவே எச்சரித்திருந்தார்.
அரசாங்க முடக்கம் தொடர்ந்தால் விமானப் போக்குவரத்துத் துறைக்கு பாதுகாப்பு அபாயம் ஏற்படலாம் என்று விமான சேவை நிறுவனங்களும் எச்சரித்துள்ளன.





