தென் கொரியாவில் தவறான விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர்ஏஷியா விமானம்

மலேசியாவை தளமாகக் கொண்ட மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஏர் ஏஷியாவின் ஒரு விமானம், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து அதன் திட்டமிடப்பட்ட இடமான இஞ்சியோன் விமான நிலையத்திற்குப் பதிலாக கிம்போ அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியதை அடுத்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது என்று ஆகஸ்ட் 14 அன்று செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.
முதலில் ஆகஸ்ட் 13ஆம் தேதி தென்கொரிய நேரப்படி இரவு 7.50 மணிக்கு இஞ்சியோனை அடையத் திட்டமிடப்பட்டிருந்த ஏர்ஏஷியா விமானம் D7 506, காற்றில் வட்டமிட்ட பிறகு இரவு 8.08 மணிக்கு கிம்போவில் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.
இஞ்சியோனுக்கு வந்துவிட்டதாக விமானி அறிவித்த பிறகு, மக்கள் தங்கள் தலைக்கு மேல் இருந்த பெட்டிகளில் இருந்து தங்கள் பைகளை எடுக்க எழுந்து நின்றனர். ஆனால் சிலர் சன்னல்களைப் பார்த்து தங்கள் தொலைபேசிகளைப் பார்த்து அவை கிம்போவில் இருப்பதைக் கண்டறிந்தனர் என்று விமானத்தில் இருந்த பயணிகள் கூறினர்.
“எல்லோரும் பீதியடைந்தனர். பயணிகள் சொல்லும்வரை நாங்கள் கிம்போவில் தரையிறங்கியதை விமான ஊழியர்கள் அறிந்திருக்கவில்லை போலும்.
இஞ்சியோன் விமான நிலையத்திற்கு மேல் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் ஏற்பட்ட ஆட்டம் காரணமாக விமானம் கிம்போவிற்கு திருப்பி விடப்பட்டது. அங்கு எரிபொருள் நிரப்பப்பட்டு, சுமார் இரண்டு மணி நேரம் கழித்து இரவு 10.17 மணிக்கு மீண்டும் இஞ்சியோனுக்கு புறப்பட்டதாக கொரியா விமான நிலையக் கழகம் தெரிவித்துள்ளது.
இஞ்சியோனுக்குப் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு நிலைமையைச் சரிவரக் கையாள விமான ஊழியர்கள் தவறிவிட்டதாக லீ குறிப்பிட்டார்.“அவர்களும் பயணிகளைப் போலவே குழப்பத்தில் இருந்தனர். தண்ணீர் வழங்கப்படவில்லை. விமானத்தில் கிட்டத்தட்ட உணவு எதுவும் இல்லை. இதனால் குழந்தைகளுடன் வந்த பயணிகள் வருத்தமடைந்தனர். சிலர் விமானம் இஞ்சியோனுக்குப் புறப்படுவதற்கு முன்பு கிம்போவில் இறங்குவதை விரும்புவதாகக் கூறினர்,” என்று அவர் விளக்கினார்.
இது குறித்து ஏர்ஏஷியா விமானம் எந்தத் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தி கொரியா ஹெரால்ட் கூறியது.