மனித குலத்தை அழிக்கும் AI தொழில்நுட்பம் – எலான் மஸ்க் அதிர்ச்சி தகவல்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மனித குலம் முடிவுக்கு வரும் என சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் எலான் மஸ்க் பகிரங்க கருத்தை வெளியிட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல துறைகள் முன்னேற்றம் அடைந்துள்ளதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் அதிபயங்கர வளர்ச்சியால் பல நிறுவனங்கள் தங்களின் பணியாட்களை வேலையை விட்டு நிறுத்தி வருகின்றனர். பலர் செய்யும் வேலையை இந்தத் தொழில்நுட்பம் தானாகவே செய்து விடுவதால், எதிர்காலத்தில் வேலையிழப்பு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தால் பல துறைகள் வளர்ச்சி அடைந்தாலும், அதன் எதிர்மறை விளைவுகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என டெக் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தொழில்நுட்பத்தால் ஏற்படும் சாதக பாதக விளைவுகளை பல முன்னணி டெக் வல்லுநர்கள் கூறினாலும், சமீபத்தில் இதுகுறித்த விவாதத்தில் எலான் மஸ்க் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற Great AI Debate நிகழ்ச்சியில் பங்குபெற்ற எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நாம் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் இவருடன் விவாதத்தில் பங்கு பெற்ற பல வல்லுனர்களும் இந்த கருத்தையே தெரிவித்தனர். குறிப்பாக 2030க்குள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்றும், அவை மனிதர்களை விட பன்மடங்கு ஆற்றல் மிக்கவையாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
இந்த தொழில்நுட்பம் மனித குலத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், இவற்றை நாம் எச்சரிக்கையாக கையாள்வது அவசியம் எனக் கூறி பீதியைக் கிளப்பிய எலான் மஸ்க், எதிர்காலத்தில் இதனால் எதிர்மறையை விட நேர்மறையை அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
எலான் மஸ்கின் இந்தக் கருத்துக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆற்றலை நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே எதிர்காலத்தில் இதனால் ஏற்படும் மாற்றத்தை கருத்தில் கொண்டு இப்போதிலிருந்து நாம் செயல்பட வேண்டியது அவசியம்.