iPhone 16இல் அறிமுகமாகும் AI வசதிகள்?
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஐபோன் 15 சீரியஸ் மாடல் ஃபோன்களை உலகெங்கிலும் அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம். இந்நிலையில் அதன் அடுத்த சீரியஸான ஐபோன் 16 குறித்த பல தகவல்கள் இணையத்தில் வெளிவரத் தொடங்கிவிட்டது.
அப்படி வெளியான ஒரு தகவலில் ஐபோன் 16 சீரியஸில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உள்ளடக்கிய மைக்ரோஃபோன் பயன்படுத்தப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இப்போது எல்லா இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த விஷயங்கள் பற்றிய பேச்சுகள்தான் அதிகரித்துள்ளது. OpenAI நிறுவனத்திற்குப் போட்டியாக பல நிறுவனங்கள் தங்களுடைய செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கி வருகின்றனர்.
கூகுள் நிறுவனமும் ஜெமினி ஏஐ என்ற முற்றிலும் புதுமையான மாடலை வெளியிட தயாராகி வருகிறது. மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய கருவிகளை தங்கள் ஸ்மார்ட்போனில் செயல்படும் விதமாக பிக்சல் 8 போனில் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதுதவிர மற்ற டெக் ஜாம்பவான்களான மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான சாதனங்களில் இந்தத் தொழில்நுட்பம் பங்குபெரும் என சொல்லப்படும் நிலையில், ஐபோன் 16 சீரியஸில் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதுவகை மைக்ரோபோனை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தப் போகிறது என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிகப்படியான இரைச்சலான இடங்களிலும், அதை தானாகவே செயற்கை நுண்ணறிவு கண்டுகொண்டு நாய்ஸ் கேன்சலேஷன் செய்யும் புதுவகை மைக்குகளை ஐபோனில் பயன்படுத்தப் போகிறார்கள்.