இலங்கை மருத்துவர் பாலியல் வன்புணர்வு சம்பவம்: சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட வைத்தியர் சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளார்.
இந்த அடையாள அணிவகுப்பு அனுராதபுரம் பிரதான நீதவான் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்றது.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி சந்தேகநபரால் கத்தி முனையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் வைத்தியர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் வன்புணர்வு செய்யப்பட்டார்.
சம்பவத்தை தொடர்ந்து குறித்த நபர் பெண் வைத்தியரின் கைத்தொலைபேசியுடன் தப்பிச் சென்றுள்ளார்.
திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியைக் கண்காணித்து பொலிஸாரால் அவரைக் கண்டுபிடிக்க முடிந்த நிலையில், மறுநாள் கல்நேவ பிரதேசத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவ சங்கத்தினர் டோக்கன் வேலை நிறுத்தத்தை நடத்தினர்.