போரில் இணைவதற்கான உடன்படிக்கை ; வடகொரியாவுக்கு ஆண்டுதோறும் 700,000 டன் அரிசி வழங்கும் ரஷ்யா
உக்ரேனியப் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாகப் போரிடுவதற்காக வடகொரியா ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை அனுப்பியிருப்பதாகவும் ஆண்டிறுதிக்குள் மேலும் ஆயிரக்கணக்கானோர் அனுப்பப்படுவர் என்றும் நம்பப்படுகிறது.அந்தப் போர் வீரர்களுக்கு மாதச் சம்பளமாக ஏறக்குறைய 2,000 அமெரிக்க டொலர் (S$2,640) வழங்கப்படுவதாகத் தென்கொரிய உளவுத்துறை, ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொரியத் தீபகற்பத்தில் நெருக்குதல் ஏற்பட்டால் ரஷ்யாவின் ஆதரவு வடகொரியாவிற்குக் கிடைக்கும் சாத்தியம் இதனால் ஏற்படும் என்பதை வல்லுநர்கள் சிலர் சுட்டினர்.
தென்கொரிய தேசிய உளவுப் பிரிவின் வல்லுநர் குழு நவம்பர் 1ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்குச் சில வாரங்கள் முன்பாக ரஷ்யாவிற்குப் படை வீரர்களை அனுப்ப வடகொரியா முடிவெடுத்தது, டோனல்ட் டிரம்ப் வெற்றிபெறுவார் அதையடுத்து உக்ரேனிலிருந்து அமெரிக்கப் படைகள் மீட்டுக்கொள்ளப்படும் என்ற அதன் கணிப்பைக் காட்டுவதாகக் கூறியுள்ளது.
எனவே அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே வடகொரியா ரஷ்யாவுடனான அதன் பிணைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்கிறது அந்த அறிக்கை.
முன்னதாக அக்டோபர் 22ஆம் திகதி வெளியிட்ட மற்றோர் அறிக்கையில் உக்ரேனியப் போர் முடிவுக்கு வந்ததும் ரஷ்யாவுக்கு வடகொரிய உறவின்மீது இருக்கும் மதிப்பு போய்விடும் என்று தென்கொரிய தேசிய உளவுப் பிரிவு கூறியிருந்தது.
ரஷ்யாவுக்கான தென்கொரியத் தூதர் வி சுங்-லாக், உக்ரேனியப் போரில் ரஷ்யாவுடன் இணைவது வடகொரியாவுக்கு நல்ல உடன்படிக்கையாகவே அமையும் என்று கொரியா ஹெரால்ட் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறினார்.
போரில் இணைவதற்கான உடன்படிக்கையின்கீழ் ரஷ்யா வழங்குபவை வடகொரியாவின் நிதி, உணவு நெருக்கடிகளைச் சமாளிக்கப் பேரளவில் உதவுவதாக அவர் சொன்னார்.உக்ரேனியப் போருக்காக ஏறத்தாழ 10,000 வடகொரிய வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கான மொத்த ஊதியம் ஆண்டுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர். மேலும், ரஷ்யா ஆண்டுக்கு 700,000 டன் அரிசியை வடகொரியாவுக்கு வழங்குவதாகத் தகவல்கள் கூறுகின்றன.