சாதாரண தராதரப் பரீட்சை முடிந்தவுடன், உயர்தர வகுப்புகள் உடனடியாக ஆரம்பம்
இவ்வருடம் கல்விப் பொதுத் சாதாரண தராதரப் பரீட்சை முடிவடைந்தவுடன் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை உடனடியாக பாடசாலைகளில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி நிறுவகத்தின் உத்தியோகபூர்வ இணைய வானொலியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த கொவிட் அனர்த்தத்தின் போது பாடசாலைகள் மூடப்பட்டதன் காரணமாக விடுபட்ட கல்வி மற்றும் பாடசாலை பரீட்சை கால அட்டவணையை மீளமைக்கும் திட்டத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த சவாலான பணியை முன்னெடுப்பதற்கு ஆசிரியர்களுக்கும் வலுவான அர்ப்பணிப்பு தேவை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உயர்தர விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழி பாடங்களை கற்பிப்பதற்காக ஏற்கனவே 3000 புதிய ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இவர்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு இந்த வாரத்தில் நடத்தப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
1 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள பாடசாலைகளின் பிள்ளைகள் உயர்தரம் படிக்க வேறு பாடசாலையில் அனுமதிக்கப்படுவதில் சிக்கல் உள்ளதால், இதற்கு தீர்வாக அமைச்சரவை பத்திரம் மூலம் அனுமதி பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்