டோனியின் 18 வருட சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர்
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள ஹம்பன்டோட்டாவில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது.
இதில் ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.
அதன்படி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விக்கெட் கீப்பர் ரமனுல்லா குர்பாசும், இப்ராகிம் ஜட்ரனும் வலுவான அஸ்திவாரம் ஏற்படுத்தி தந்தனர்.
39 ஓவர்கள் வரை இந்த கூட்டணியை அசைக்க முடியவில்லை. அபாரமாக ஆடிய குர்பாஸ் தனது 5-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் (39.5 ஓவர்) திரட்டி பிரிந்தனர். இப்ராகிம் ஜட்ரன் 80 ரன்னில் கேட்ச் ஆனார். ரமனுல்லா குர்பாஸ் 151 ரன்கள் (151 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசியதோடு, பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார்.
இதற்கு முன்பு இந்திய விக்கெட் கீப்பர் டோனி 148 ரன் (2005-ம் ஆண்டு) எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.